அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், கோல்டு கார்டு என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரீன் கார்டுதாரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் அடங்கிய கோல்டு கார்டு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக, 41 கோடியே 50 லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் கோல்டு கார்டு பெறலாம் என்றும், இதன் வாயிலாக அமெரிக்க குடியுரிமை பெறுவது சுலபமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறியுள்ள அவர்,
இதுவரை நடைமுறையில் இருந்த இபி 5 முதலீட்டாளர் விசாவில் பல மோசடிகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால், அந்த விசாவை ரத்து செய்துவிட்டு, கோல்டு கார்டு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறிய அவர், முதல் கட்டமாக, 10 லட்சம் கோல்டு கார்டுகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோல்டு கார்டு விசா வாயிலாக கிடைக்கும் பணம் அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.