மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கோவை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் 92 வயது மூதாட்டி அப்பம் சுட்டு எடுத்தார். மேலும் அப்பத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் திரௌபதி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.