422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் நிதியுதவி சென்னை ஐஐடிக்கு வழங்கப் பட்டிருப்பதாக கூறியுள்ள மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் பற்றிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாட்டின் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் இந்திய ரயில்வேயின் அடையாளமாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை.
இந்நிலையில், வந்தே பாரத், புல்லட் ரயில்களை விட அதிவேகமாக செல்லக்கடிய ஹைப்பர்லூப் ரயில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. புல்லட் ரயில்களின் வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் ஆக உள்ளது. அதைவிட வேகமாக, ஹைப்பர்லூப் ரயில்கள் மணிக்கு 1,100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாகும்.
ஹைப்பர்லூப் ரயில் சேவை என்பது “ஐந்தாவது போக்குவரத்து முறை” என்று குறிப்பிடப்படுகிறது. ஹைப்பர்லூப் என்பது குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் வழியாக அதிக வேகத்தில் பயணிக்க உதவும் தொழில்நுட்பமாகும்.
குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியான லூப், ரயில்பெட்டி போன்ற வாகனமான பாட், மற்றும் பெட்டிகள் நிறுத்தும் பகுதியான டெர்மினல் ஆகிய மூன்று பகுதிகளும் ஹைப்பர்லூப்-ஐ பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை ஆகும்.
காற்றை வெளியேற்றிய பிறகு, காந்த விசையால் குறைந்த அழுத்தக் காற்றால் நிரப்பப்பட்ட இந்தக் குழாய் வழியாக பயணிக்கும் பாட் அனுப்பப் படுகிறது. பாட் என்பது ரயில்களில் உள்ள பெட்டிகளைப் போன்ற ஒரு சிறிய கேப்சூல் வடிவிலான வாகனம் ஆகும். பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் இந்த பாட் பயன்படுத்தப்படலாம்.
1960களில் தொடங்கப்பட்ட ஹைப்பர்லூப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1960களிலேயே இருந்தாலும், 2012 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் இத்தொழில்நுட்பத்தில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
ஆனாலும் எலான் மஸ்கால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அளவுக்கு ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில்தான், இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக, பாட் எனப்படும் ஹைப்பர்லூப் ரயில்பெட்டியை சென்னை ஐஐடிமாணவர்கள் மேம்படுத்தியுள்ளனர். நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹைப்பர்லூப் பாட்-க்கு கருடா என பெயரிட்டுள்ளனர். இந்திய ரயில்வே துறையின் நிதியுதவியுடன், சென்னை ஐஐடி மாணவர்கள் மற்றும் TuTr ஸ்டார்ட் அப் நிறுவனமும் இணைந்து, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் பாதையை உருவாக்கியுள்ளனர்.
இத்திட்டத்துக்காக, சென்னை ஐஐடியில் அவிஷ்கர் ஹைப்பர்லூப் (Avishkar Hyperloop) என்ற மாணவர்களின் குழு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 11 வகையான படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்றுவரும் 76 மாணவர்களை உள்ளடக்கியதாக இந்த குழு அமைந்துள்ளது. இந்த மாணவர்கள் குழு, ஹைப்பர்லூப்பின் பல்வேறு கட்டங்களை வடிவமைத்து வருகின்றனர்.
சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய இந்த ஹைப்பர்லூப் சோதனைப் பாதை 422 மீட்டர் நீளம் கொண்டதாகும். மெட்ராஸ் ஐஐடியின் தையூர் டிஸ்கவரி வளாகத்தில், இந்த ஹைப்பர்லூப் சோதனைப் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே அதிக நீளம் உள்ள ஹைப்பர்லூப் பாதை இது என்பது குறிப்பிடத் தக்கது.
நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை, பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்ராஸ் ஐஐடி க்கு, இந்த திட்டத்துக்கான மூன்றாவது மானியமாக 872 கோடி ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் வணிக ஹைப்பர்லூப் திட்டத்தை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹைப்பர்லூப்பின் வடிவமைப்பு குறைந்த மின்சாரச் செலவு செலவு மற்றும் 24 மணி நேரமும் தொடர்ச்சியான சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சென்னையிலிருந்து திருச்சிக்கு ,சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 30 நிமிடங்களில் செல்ல முடியும். சென்னையில் இருந்து டெல்லிக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும். மும்பையிலிருந்து புனேவுக்கும் வெறும் 25 நிமிடங்களில் செல்லமுடியும். விமானத்தை விட வேகமாக செல்லும் இந்த ஹைப்பர்லூப் ரயிலின் பயணக்கட்டணம், விமான கட்டணம் அளவுக்குத் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் முழு அளவிலான ஹைப்பர்லூப் ரயில் திட்டத்துக்கான முதல் ஹைப்பர்லூப் பாதையாக, மும்பை-புனே வழித்தடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள், மும்பைக்கும் புனேவுக்கும் இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹைப்பர்லூப் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், போக்குவரத்து அமைப்பையே மாற்றிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்திய பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை ஹைப்பர்லூப் ரயில்கள் தரும் என்று கூறப்பட்டுள்ளது.