சிவகங்கை அருகே அரசு பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், அரசு பள்ளி கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டதால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள சிவசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் தற்காலிகமாக பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கரும்பலகை உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் பாடம் கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், கோயில் அருகிலேயே குளம் இருப்பதால் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே பாடம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பராமரிப்பு பணியை விரைந்து முடித்து பள்ளி கட்டடத்தில் மாணவர்கள் பயில வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.