திருக்கழுக்குன்றத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அதிமுக நகர செயலாளர் தினேஷ்குமார் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தினேஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தினேஷ் குமார் தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வீட்டிலேயே சிறைப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் இருதரப்பனரிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.