அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் பெற்று ஊழியர்களை நியமித்ததாக தொடர்ந்த வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி தடை விதிக்க மறுத்துவிட்டார்.
மேலும், மனுவுக்கு மார்ச் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.