பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளர் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட காவலாளி கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் 12 வார காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகததால் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர்.
தொடர்ந்து போலீசார் சென்ற சிறிது நேரத்திலேயே சீமானின் பணியாளர் சுதாகர், வீட்டில் ஒட்டுப்பட்ட சம்மனை கிழித்தெரிந்தார்.
இதையறிந்த போலீசார் சம்மனை கிழித்தவர் குறித்து விசாரிக்க சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அப்போது சீமானின் வீட்டின் காவலாளி அமுல்ராஜ் போலீசாரை தடுக்க முயன்றதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து காவலாளி அமுல்ராஜை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவரை இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
அப்போது காவலாளி தான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என கூறி துப்பாக்கியை காட்டியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து சம்மனை கிழித்த பணியாளர் சுதாகரும் கைது செய்யப்பட்ட நிலையில், நடந்த சம்பவத்திற்காக போலீசாரிடம் சீமானின் மனைவி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.