சீமான் வீட்டில் பணிபுரியும் பாதுகாவலர் அமல்ராஜ் உள்ளிட்ட 2 பேருக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஒட்டிய சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ், சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அமல்ராஜ் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் பணியாளர் சுதாகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இருவரும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமல்ராஜ், சுதாகர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட நீீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் கேட்டை திறக்கவில்லை என்றால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.