ஈரோடு அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில், எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும நாணயத்தை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி பகுதியில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும் நாணயத்தை ஏலத்தில் விடுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு சிவராத்திரி திருவிழாவையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமிக்கு சாத்தப்பட்ட எலுமிச்சை பழம், சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம், கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலம் விடப்பட்டன.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், தங்கராஜ் என்பவர் எலுமிச்சை பழத்தை 13 ஆயிரம் ரூபாய்க்கும், ரவிக்குமார் பானுப்ரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35ஆயிரம் ரூபாய்க்கும், சிதம்பரம் என்பவர் வெள்ளி மோதிரத்தை 43 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.
ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும், ஆரோக்கியம் அதிகரிக்கும் எனவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.