சென்னையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தேசிய அளவில் 3வது முறையாக உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த இன்வென்டிவ் கண்காட்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து மத்திய அரசின் கல்வி தரவரிசையில் இடம் பெற்றுள்ள 87 உயர்கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சியின் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது ஆராய்ச்சி குறித்த தகவல்களை காட்சிப்படுத்தியுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூசம்தார், தமிழகம் உயர்கல்வியில் மட்டுமில்லாமல், உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடத்தில் இருந்து வருவதாகவும், மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் தொடக்க விழாவில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக கூறினார். மேலும் தொழில்துறையினரும் உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே இடத்தில் சந்திப்பது பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக அமையும் என்றார்.