ஈஷா யோக மையத்துக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவை ஈஷா யோக மையத்துக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈஷா யோகா மையத்தின் கட்டுமான விதி மீறல்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது என்றும் அதே சமயம் யாருக்கும் சலுகை காட்டக்கூடாது என்பதால் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால் எந்த விதி மீறலுக்கும் சலுகை அளிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய கருத்துகளை முன்வைத்துள்ளதால் இதில் தலையிட வேண்டிய தேவையே இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில், யோகா மையம் வரும் காலத்தில் எந்த கட்டுமானம் கட்டினாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.