புனேவின் பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கில், மிகப்பெரிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 72 மணி நேரத்துக்குள், குற்றவாளி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே நகர மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் ஆலோசகராக பணிபுரியும் 26 வயதுடைய இளம்பெண், வேலை முடித்துவிட்டு, தனது சொந்த ஊரான சதாரா மாவட்டத்தில் உள்ள ஃபால்டனுக்கு திரும்புவதற்காக புனேவின் ஸ்வர்கேட் பேரூந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பேரூந்து நடத்துனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட குற்றவாளி, வேறு இடத்தில் பேரூந்து நிற்பது வழக்கம் எனக் கூறியுள்ளான். பேரூந்து நிற்கும் இடத்தைக் காட்டுவதாக சொல்லி,செல்போன் வெளிச்சத்தில் இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளான்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பணி மனையில், நிறுத்தப்பட்டிருந்த குளிர் சாதன பேரூந்துக்குள் ஏறச் சொல்லியுள்ளான். பேரூந்தின் உள்ளே விளக்குகள் அணைந்திருந்ததால், இளம் பெண் ஏறத் தயங்கியுள்ளார். ஆனால் அது சரியான பேரூந்துதான் என்று நம்ப வைத்துள்ளான்.
பேரூந்து உள்ளே சென்றதும், அவரை பின்தொடர்ந்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியுள்ளான். செய்வதறியாமல் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய இளம்பெண், இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிக்கு மரண தண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனை வழங்கப் படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உறுதியளித்திருந்தார்.
இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் 37 வயதான தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்று காவல் துறையினர் அடையாளம் கண்டனர். குற்றவாளி மீது பாரதிய நியாய சன்கிதா பிரிவு 392-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் வாளியான தத்தாத்ரே ராம்தாஸ் காடே குறித்து தகவல் கொடுப்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றுமு் அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே அஹில்யாநகர், ஷிக்ராபூர் மற்றும் ஷிரூர் காவல் நிலையங்களில் தத்தாத்ரே ராம்தாஸ் காடே காடே மீது திருட்டு மற்றும் வழிப்பறி என 6 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019ம் ஆண்டு தான், தத்தாத்ரே ராம்தாஸ் காடே ஜாமீனில் வழிவந்திருக்கிறான் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தந்தையான தத்தாத்ரே ராம்தாஸ் காடே மீது கடந்த ஆண்டு, புதிய திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல முறை கைது செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
குற்றச் செயல்களுக்கு அப்பால், நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், முக்கிய அரசியல் தலைவர்களுக்காகப் பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஷிரூர் தொகுதியைச் சேர்ந்த என்சிபி (அஜித் பவார் பிரிவு) எம்எல்ஏ மௌலி கட்கே மற்றும் என்சிபி (ஷரத் பவார் பிரிவு) முன்னாள் எம்எல்ஏ அசோக் பவார் இருவருக்கும் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், இரண்டு அரசியல்வாதிகளும் குற்றவாளியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று உடனடியாக மறுத்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த தத்தாத்ரே ராம்தாஸ் காடேவைப் பிடிக்க காவல்துறையினர் விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட கொண்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
புனே மாவட்டம் மற்றும் அதற்கு அப்பாலும் குற்றவாளியைக் கண்காணிக்க ட்ரோன்கள் நிறுத்தப்பட்டன. மோப்ப நாய் படைகளும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப் பட்டன.
கடந்த வியாழக் கிழமை, உணவு மற்றும் தண்ணீர் கேட்டு, தங்கள் வீட்டுக்கு வந்ததாக உறவினர்கள் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, காடே பயன்படுத்திய சட்டையைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சட்டையின் வாசனை திரவியத்தைப் பயன்படுத்தி, மோப்ப நாய் படை,குற்றவாளி தப்பிச் சென்ற வழியைக் கண்டுபிடித்தது. அந்தப் பாதை, புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷிரூர் தாலுகாவில் இருக்கும் சொந்த கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் காவலர்களை அழைத்துச் சென்றது.
இதையடுத்து இரவில் அக்கரும்பு தோட்டத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கரும்பு தோட்டத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது. அருகிலுள்ள கால்வாயின் பக்கத்தில் உள்ள நெல்வயலில் குற்றவாளி மறைந்திருப்பதைக் கிராம மக்கள் கண்டுபிடித்தனர்.
குற்றவாளியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன், விரைந்து சென்ற காவல் துறையினர், குற்றவாளியை காவலில் எடுத்தனர். அதன் பின்னர் புனேவுக்குக் கொண்டு வரப்பட்டவுடன் , ஸ்வர்கேட் காவல் நிலையத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) குற்றவாளியை முறையாகக் கைது செய்தது.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேரூந்து பணிமனைகளிலும் விரிவான பாதுகாப்பு தணிக்கைக்கு மாநிலப் போக்குவரத்துதுறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் அனைத்து அங்கீகரிக்கப்படாத பேரூந்துகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் பணிமனைகளில் இருந்து அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எடுத்துரைத்த சர்நாயக், பேரூந்து நிலையங்களில் அதிக பெண் பாதுகாப்பு காவலர்களை நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். கூடுதலாக, ஸ்வர்கேட்டில் உள்ள உதவி போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் பேருந்து பணிமனை மேலாளர் மீது துறை ரீதியான விசாரணையையும் தொடங்கி இருக்கிறார்.