உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனுவில் வார்டு உறுப்பினர் முழுமையான தகவல் தெரிவிக்காதது தொடர்பான வழக்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காத திருவாரூர் மாவட்ட வார்டு உறுப்பினர் பாப்பா.சுப்ரமணியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சரத்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடர்பாகவும், பதவிக் காலத்தை நிறைவு செய்ய அனுமதித்தது குறித்தும் விளக்கமளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
வேட்புமனுவில் தகவல்களை மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால் எதற்காக தகவல்கள் கேட்கப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்த பாப்பா.சுப்பிரமணியனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறி விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்ம தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.