தமிழகத்தில் மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற விழாவில் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்களை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் புத்தகங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது என்று தெரிவித்தார். தமிழகத்தில் வேறு கட்சி ஆண்டாலும் வளர்ச்சி திட்டங்களை வழங்குவதில் பிரதமர் மோடி பாகுபாட்டை காண்பித்தது இல்லை எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
உள்நாட்டிலும் சரி அயல்நாட்டிலும் சரி, சில அந்நிய சக்திகளுக்கு சனாதன தர்மம் உயர்வது பிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பெருமை பிரதமர் மோடியை சேரும் எனவும் தெரிவித்தார்.