ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் நீர்ப்பாசன திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் நீர்ப்பாசன திட்டம் மூலம் சுமார் 44 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல நாகர்கர்னூல் மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 22-ம் தேதி ஏற்பட்ட நீர்க்கசிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் உயிர் தப்பிய நிலையில், இரு தனியார் நிறுவன அதிகாரிகள், இரு கிரேன் ஆப்பரேட்டர்கள் மற்றும் 4 தொழிலாளர்கள் என 8 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர். சுரங்கத்தின் 14-வது கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை மற்றும் ரயில்வே மீட்பு குழுவினர், தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஒருவார காலமாக, இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்ய ரயில்வே மீட்புக் குழுவினர் கொண்டு வந்த சிறிய ரேடார்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீட்பு பணி தொடரும் நிலையில், ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுக்கய் தயார் நிலையில் உள்ளன.