தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், அதிகாலை கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. அரைமணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெய்த திடீர் கனமழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.