சென்னை பட்டாபிராம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் ராமகிருஷ்ணா தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஆவடி மாநகராட்சி சார்பில் பள்ளியில் கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, காலை வேலையில் வகுப்பு நடைபெறும் நேரத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடித்துள்ளனர். இதனால், பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கேள்வி கேட்ட பெற்றோரை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.