கடலூரில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படங்களை எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், உருவப்படங்களை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
பாஜக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமரின் உருவப் படத்தை எரித்தவர்களை கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜகவினரைக் காவல்துறை கைது செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கைதான பாஜகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.