கன்னியாகுமரியில், தேவாலய தேர் திருவிழாவின் போது, மின்சாரம் பாய்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனயம் புத்தன் துறை பகுதியில் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர் பவனி விழாவை ஒட்டி, தேவாலயத்துக்கு வெளியே 4 பேர் தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு ஏணியை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது, அங்குள்ள உயரழுத்த மின்கம்பியில் இரும்பு ஏணி உரசியுள்ளது.
இதனால் மின்சாரம் பாய்ந்து மீனவ கிராமத்தை சேர்ந்த விஜயன், மனோ, ஜெஸ்டஸ், சோபன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பான பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்த 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
தகவல் அறிந்து, பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.