குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில், தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .