சென்னையில் பாரம்பரியம் மிக்க உதயம் தியேட்டர் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதே போல் மதுரையிலும் திரையரங்கு ஒன்று தனது இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திரைப்படங்கள் மனதில் நிற்கின்றவோ இல்லையோ… அந்த திரையரங்குகள் அவ்வளவு எளிதில் மனசுகளை விட்டு நீங்குவதில்லை…
சில காலம் முன்பு வரை மக்களுக்கு பொழுது போக்கு என்றால் அது திரையரங்குகளுக்கு சென்று சினிமாக்கள் பார்ப்பதுதான்… செல்போன், சமூக வலைதளம், ஓ.டி.டி என பல்வேறு வகையான பொழுது போக்கு அம்சங்கள் தற்போது மக்களுக்கு எளிதாக கிடைப்பதால் திரையரங்குகளை நோக்கிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ஓடுமா? ஓடாதா? என்பதை அறிந்து கொள்ள விநியோகஸ்தர்கள் முதலில் தொடர்பு கொண்டு கேட்பது மதுரை திரையரங்க உரிமையாளர்களிடம்தான். மதுரையில் தான் அனைத்து வகையான ரசிகர்களும் இருப்பார்கள் என்பதே முக்கிய காரணம் .
சினிமாவை காதலிக்கும் மதுரைக்காரர்கள் ஒரு சினிமா வெற்றி பெறுகிறதா? தோல்வி அடைகிறதா என்பதை சரியாக கன கச்சிதமாக சொல்லும் திறமை பெற்றவர்கள். மதுரை ரசிகர்கள் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று கூறினால் அந்த படம் வெற்றி படமாகவே தமிழ் சினிமாவால் கருதப்படும். அப்படி மதுரையில் ரசிர்களை ஈர்த்து படம் பார்க்க வைத்த திரையரங்குகள் ஒவ்வொன்றாக மூடப்பட, அடுத்த பட்டியலில் அம்பிகா திரையரங்கும் இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மதுரையில் ஆசியாவிலேயே பெரிய திரையரங்கமாக இருந்த தங்கம் திரையரங்கம் மூடப்பட்டு தற்பொழுது தனியார் துணி கடையாக மாறியிருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களின் படங்களை ஒளிபரப்பி ரசிகர்ளை படையெடுக்க வைத்த “சென்ட்ரல் சினிமா” திரையரங்கம் மூடப்பட்டு கார் பார்க்கிங்காக செயல்படுகிறது. அதேபோல பல திரையரங்குகள் மூடப்பட்டு குடோன்களாக மாற்றப்பட்டுவிட்டன. சென்ட்ரல் சினிமா திரையரங்கில் படங்களை பார்த்து ரசித்த ரிக்ஷா ஓட்டுநர் பாண்டி அந்த அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“தான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் 100 முதல் 150 நாட்கள் வரை ஓடும்…. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை…இதனாலும் திரையரங்குகள் மூடப்பட்டுகின்றன” என்கிறார் சினிமா ஆர்வலர் செல்வம்.
இந்த நிலையில் தான் மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அம்பிகா திரையரங்கம் வரும் 5ஆம் தேதியுடன் தனது பயணத்தை நிறுத்திக் கொள்கிறது.
1987 ஆம் ஆண்டு முதல் 36 ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வந்த அம்பிகா திரையரங்கில், பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் நூற்று கணக்கான நாட்களை கடந்து ஓடியிருக்கின்றன.
ரசிகர்களின் கைத்தட்டல்கள், விசில்கள், சிரிப்புகள், அழுகைகள் என மோதி எதிரொலித்த அம்பிகா திரையரங்கின் சுவர்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட உள்ளன என்பதுதான் ஒரு துயரமான க்ளைமேக்சாக அமைந்துவிட்டது.
இன்னொரு சோகம் என்னவென்றால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திரையரங்கு ஊழியர்களும் திகைத்துப் போயிருக்கிறார்கள். திரையரங்கம் மூடப்பட்டால் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து யோசிக்கவில்லை என கண்கலங்க சொல்கிறார் 23 ஆண்டுகளுக்கு மேலாக அம்பிகா திரையரங்கில் பணி புரியும் மேலாளர் ராஜசேகர்.
அம்பிகா திரையரங்கம் முழுவதும் இடிக்கப்பட்டு பல்வேறு பொழுதுபோக்குகளை கொண்ட மல்டி லெவல் மால் ஒன்று வர இருப்பதாக கூறப்படுகிறது. , திரையரங்கம் மூடப்படுவது குறித்த அறிந்த ரசிகர்கள் தினமும் இங்கே வந்து நின்று புகைப்படம் எடுத்துச் செல்வதோடு பழைய நினைவுகளையும் கண் கலங்க பகிர்ந்துகொள்கின்றனர்.