தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள லட்சம்மாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி மேள தாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ராக்கப்பெருமாள் கோயிலில், சிவராத்திரியையொட்டி பாரிவேட்டை பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகை அடுத்த புதுகல்லார் மீனவ கிராமத்தில் உள்ள சீதாளம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீதாளம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோயில் யானை மேல் கொடிப்பட்டம், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள முத்து காளியம்மன் தர்ம முனீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து முளைப்பாரியை சுற்றி கும்மி நடனமாடி மகிழ்ந்தனர்.