திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் முதல்நிலை காவலர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த 8ஆம் தேதி, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சரவணன் என்பவரையும் ஒடிசாவைச் சேர்ந்த அவரது தோழியையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இருவரையும் காவல் நிலையத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டுமென சரவணனின் மனைவியிடம் முதல்நிலை காவலர் பெருமாள் கேட்டுள்ளார்.
ஜிபே மூலம் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெற்ற காவலர், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ வெளியாகி வைரலானதால் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.