மூணாறு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சர்வதேச சுற்றுலா தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இங்கு வரும் இளைஞர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், மூணாறு தேவிகுளம் பகுதியில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனை, அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.