தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று சென்னையில் உள்ள தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். இதனிடையே தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் மொத்தமாக 109 தேர்வு மையங்களில் 37 ஆயிரத்து 457 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 8.30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில், 108 பறக்கும் படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 298 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 73 மையங்களில் தேர்வு நடைபெறும் நிலையில், 117 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் 31 ஆயிரத்து 580 மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், மொத்தமாக 131 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் தனித் தேர்வாளர்களாக மொத்தம் 549 பேர் 14 மையங்களில் தேர்வு எழுதினர்.
இதேபோல் சேலம், சிவகங்கை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுத ஆர்வத்துடன் வருகை தந்த நிலையில், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.