12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 61 ஆயிரத்து 641 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியதாகவும், அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எதிர்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர் உட்பட 5 ஆயிரத்து 137 பேர் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.