சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தை கடன்கார மாநிலமாக திமுக மாற்றியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, திமுக ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்துள்ளார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ள அண்ணாமலை, 2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் திமுக நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை திமுகவினர் அறியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவே மத்திய அரசு கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால் திமுக அரசு எதற்காக கடன் வாங்கியது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
வாங்கிய கடனில் உங்களது கமிஷன் எவ்வளவு என்றும், அல்லது கமிஷன் வாங்கத்தான் கடன் வாங்குகிறீர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.