பாளையங்கோட்டை அருகே அய்யா வைகுண்டர் கோயில் திருவீதி உலாவின்போது காவல்துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை நீடித்து வருவதாக தெரிகிறது.
ஒரு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அய்யா வைகுண்டர் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம், ஆனால் அந்த பகுதியில் அன்னதானத்திற்கு சமைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவையொட்டி ஒரு தரப்பினர் கோயில் அருகே அன்னதானத்திற்காக உணவு சமைத்தபோது மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உணவு சமைப்பதற்காக வைத்திருந்த பாத்திரங்களை அப்புறப்படுத்தினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.