கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்களால் ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கரையில் கடந்த, 2021-ல் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் கோவை, பாலக்காடு வழித்தடத்தில் மதுக்கரையில் நாட்டில் முதன்முறையாக, AI கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 12 டவர்களில், 12 AI கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் யானைகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.