இந்தியாவில் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என ஆஸ்திரேலிய பெண் சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனியாக சுற்றுப் பயணம் செய்யும் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என இணையத்தில் சிலர் கருத்தை முன்வைத்தனர். இதனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெக் மெக்கோல் என்ற பெண் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றுலா சென்ற அவர், தனது பயணங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து தனியாக இந்தியாவுக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவில் தனியாக நடந்து சென்றதாகவும், தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்திய உணவு வகைகளுக்காக ஏங்குவதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நகரங்கள், யுனெஸ்கோ புராதன சின்னங்களை பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.