மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று நாடுகளுடனும் வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது. ஏன் இந்த 3 நாடுகள் மீது கூடுதல் வரி ? இதனால் யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சீனாவில் இருந்தும் மெக்சிகோ மற்றும் கனடா நாட்டு எல்லைகள் வழியாகவும் பல்வேறு போதைப் பொருட்கள் அதிக அளவில் அமெரிக்காவுக்குள் வருகின்றன. அமெரிக்க அரசு பலமுறை எச்சரித்தும் இந்த மூன்று நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போதைப் பொருட்களால், அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோத அகதிகள் மற்றும் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 35 சதவீதமும் வரியும் விதிக்கப்படும் என்று அதிபராக பதவியேற்றவுடன் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த புதிய வரிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்குப் பின் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குமான புதிய வரி விதிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிக்கும் காரணத்துக்காக, கனடா மற்றும் மெக்சிகோ மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், போதைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ஃபென்டானில் கடத்தலைத் தடுத்து இந்த கூடுதல் வரியை தவிர்க்கும் எந்தவித ஒப்பந்தத்துக்கும் இடமில்லை என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக,பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தங்கள் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் இராணுவ தளவாடங்கள் வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
மேலும், சுமார் 7.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகள் இன்னும் 21 நாட்களுக்குள் விதிக்கப்படும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளைச் சமாளிக்க நாடு தயாராக இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு சீனாவும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகபட்சம் 15 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 25 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏற்றுமதி மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தச் சூழலில், சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிவிதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். புதியவரி விதிப்பு அமலுக்கு வந்த ஒரே நாளில், அமெரிக்க பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், உணவு,மதுபானம், தொடங்கி,கார்கள் வரை பல பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா வரிகளை விதிப்பதும், அதற்குப் பதிலடியாக சீனா,கனடா,மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்கா மீது வரிவிதிப்பதும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.