தமிழகத்தில் மக்கள் புழக்கத்தில் இருந்த முதல் மருத்துவம் தமிழ் மருத்துவம் தான் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் மருத்துவ மரபுகள் தொடர்பான 10 நாட்கள் கருத்தரங்கம் தொடங்கியது. துணைத் தலைவர் சுதா சேஷய்யன், இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் இந்நிகழ்வை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் உரையாற்றிய சுதா சேஷய்யன், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலம் காலமாக மக்கள் மத்தியில் புழக்கத்திலிருந்த மருத்துவம் தமிழ் மருத்துவம் தான் என தெரிவித்தார். மேலும் இந்த பயிலரங்கில் பங்கேற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ அறிவியல் சார்ந்த செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன், தமிழ் மருத்துவ மரபுகள் எனும் தலைப்பில் நடைபெறும் இந்த பயிலரங்கத்தில் 38 அமர்வுகள் நடைபெற இருப்பதாகவும், அதில் 28 புகழ்பெற்ற மருத்துவர்கள் பங்கேற்று துறைசார்ந்த விளங்கங்களை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்