சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 102 ரன்களும் விளாசினர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இன்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள், ஒன்றன் பின் ஒருவராக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் தெம்பா பவுமா 56 ரன்களிலும், வான்-டெர் டுசென் 69 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர், 67 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இருந்தபோதிலும், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, ஞாயிறு அன்று நடக்கவுள்ள இறுதிபோட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.