கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் – மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன் மற்றும் எம்எல்ஏக்கள் பண்ணாரி, செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடித்த பின்பு அந்தியூரைச் சேர்ந்த நிர்வாகி குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை அடுத்து அந்தியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களையும் அதிமுக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.