தனக்கெதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நடிகர் சிங்கமுத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் நடிகர் வடிவேலு மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார்.
யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கக்கோரியும், அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் மாற்றிய நிலையில், வடிவேலு நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார்.
தொடர்ந்து ஆஜரான சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும்,
குறுக்கு விசாரணையை பதிவு செய்ய வேண்டுமென்பதால் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கேயே முறையீட்டு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.