கிருஷ்ணகிரியில் குழந்தை திருமணம் செய்து வைத்து, சிறுமியை வலுக்கட்டாயமாக கணவர் வீட்டுக்கு தூக்கி சென்ற சம்பவத்தில், சிறுமியின் தாயார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், அவரது படிப்பை பாதியில் நிறுத்திய குடும்பத்தார் கடந்த 3-ம் தேதி, அவருக்கு காலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த திருமணத்தில் விருப்பமில்லாத சிறுமி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில், உறவினர்கள் அவரை தடுத்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மீண்டும் கணவர் வீட்டில் விட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது சகோதரர் மல்லேஷ், சிறுமியின் தாயார் நாகம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.