குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கம் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியை சோதனை செய்தனர்.
அப்போது, ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், லாரியில் இருந்த 4 ஆயிரத்து 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் பார்த்திபன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கேரளாவில் ஜெலட்டின் குச்சிகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால் தமிழகத்தில் கள்ளச்சந்தை மூலம் மொத்தமாக வாங்கியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கள்ளச்சந்தையில் ஜெலட்டின் குச்சிகளை விற்பனை செய்ததாக கரூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.