துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள 14.8 கிலோ தங்க நகைகள் ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கர்நாடகாவின் சிக்மக்ளூரை சேர்ந்த 32வயதான ரன்யா ராவ், பிரபல கன்னட திரைப்பட நடிகையாவார். கன்னட நடிகர் கிச்சா சுதீப் இயக்கி நடித்த “மாணிக்யா” என்ற படத்தில் சுதீப்புக்குச் ஜோடியாக அறிமுகம் ஆனார். தமிழில், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரன்யா ராவ், நடித்திருந்தார்.
நடிகை ரன்யா ராவ், கர்நாடகவில் டிஜிபி அந்தஸ்து உள்ள ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவின் வளர்ப்பு மகளாவார். ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவ் கர்நாடக காவல் துறையில் Housing Corporation ஹவுசிங் கார்பரேஷனில் பணியாற்றி வருகிறார்.
அடிக்கடி சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் நடிகை ரன்யா ராவ், (Directorate of Revenue Intelligence)வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் நான்கு முறை ரன்யா ராவ் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நான்காவது முறையாக துபாய்க்குச் சென்று விட்டு, கடந்த திங்கட்கிழமை இரவு, துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்திறங்கினார் நடிகை ரன்யா ராவ்.
அனுமதிக்கப் பட்டிருந்த அளவைக் காட்டிலும் அதிகமாக நகை அணிந்திருந்த ரன்யா ராவை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்ததையும், அவரது உடைகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததையும், புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் துபாய் சென்று, தங்கத்தை கடத்தி வந்த ரன்யா ராவை, கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களுருவில் உள்ள DRI தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தன்னை டிஎஸ்பி மகள் என்று கூறிய ரன்யாராவ், தன்னை வீட்டுக்கு அழைத்து செல்ல பெங்களூரு மாநகர காவல்துறையினர் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் யாரும் வரவில்லை. அதன் பின்னர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தனது மகளிடம் இருந்து தான் விலகி இருப்பதாக கூறியுள்ள கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டிட கலைஞரான ஜடின் ஹுக்கேரியை ரன்யா ராவ் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தம்மை சந்திக்க வரவில்லை என்றும் ராமச்சந்திர ராவ் கூறியுள்ளார். மேலும், ரன்யா ராவ் மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தன் குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
வளர்ப்பு மகள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறியுள்ள ராமச்சந்திர ராவ், ரன்யா சட்டத்தை மீறி இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக ரன்யா ராவ் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. ரன்யா ராவ் யார் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்? என்றும் அவரை தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தியவர்கள் யார் ? என்பதைக் கண்டறிய விசாரணை தீவிர படுத்தப் பட்டுள்ளது.
இந்த சூழலில், ரன்யா ராவின் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளும் அரசியல் பிரபலங்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.