மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தொடங்கி வைத்த கையெழுத்து வாங்கும் நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
இதே போல வேலூர் மாவட்டத்திலும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் காத்தியாயினி தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் கையெழுத்து இட்டு மும்மொழிக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
மும்மொழி கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் தனியார் பள்ளிகளுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதால் தமிழக அரசு மும்மொழி கல்விக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வைகை அணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாஜக மாநில நெசவாளர் அணி தலைவர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
நாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன் பங்கேற்று மும்மொழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்களிடம் கையெழுத்தை பெற்றார். அப்போது செய்தியாளகளிடம் பேசிய அவர் தரமான கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டது. மும்மொழிக்கொள்கையின் அவசியம் குறித்து எடுத்துரைத்த பாஜக நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தின் படிவத்தில் கையொப்பம் இட்டனர்.
மதுரை பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மும்மொழி கல்விக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மும்மொழியின் தேவை குறித்து மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துரைத்தனர்.