இந்தி எதிர்ப்பில் அறிஞர் அண்ணாதுரையிடம் இருந்த நேர்மை ஸ்டாலினிடம் இல்லை என்றும், அண்ணா சொன்னதை நமது பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் எனவும் பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், சிம்மக்கல் அருகே உள்ள எல்.என்.பி அக்ரஹாரம் பகுதியில் மாவட்ட பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட பூமியான கேரளாவில் மும்மொழி கல்விக்கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கேரளா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றும், கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் வளர்ந்ததை விட மலையாளம் பன்மடங்கு வளர்ந்துள்ளதாகவும் கூறினார்.
இந்தி எதிர்ப்பில் அறிஞர் அண்ணாதுரையிடம் இருந்த நேர்மை ஸ்டாலினிடம் இல்லை என்றும், அண்ணாதுரை எந்தவொரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தாமல் இந்தியை எதிர்த்தார் எனவும் குறிப்பிட்டார். மேலும், திமுகவினர் நடத்தும் இந்தி பள்ளிக்கூடங்களை மூட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.