தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
இதேபோன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், தமிழகத்தில் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனை தடுக்க ஆளும் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று மாபெரும் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.
கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கூடுதலாக ஒரு மொழி கற்பதில் தவறில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழி கற்காதவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும் என்றனர்.
சென்னை சூளைமேட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை திணிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.