தென் கொரியாவில் போர் விமான பயிற்சியின் போது தவறான இடத்தில் குண்டு வீசியதால் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன் 15 பேர் காயமடைந்தனர்.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போச்சியான் நகரில், விமான படையின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதன் அருகே வடகொரியாவின் எல்லை இருப்பதால் இந்த பகுதி ராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. தென் கொரியாவில் அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ ஒத்திகை துவங்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளை தென் கொரியா மற்றும் அமெரிக்க விமான படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று கே.எஃப் 16 ஜெட் விமானத்தில் அவர்கள் கூட்டு பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, எம்.கே 82 என்ற 225 கிலோ எடையிலான குண்டை தவறான இலக்கில் ஏவினர். அந்த குண்டு குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் விழுந்ததில் வீடுகள் மற்றும் தேவாலயங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.