பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், படகு உரிமையாளர் ஒருவர், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல், மகா சிவராத்திரி வரை 45 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரமே விழாக் கோலம் கொண்டிருந்தது. உலகமெங்கும் இருந்து சுமார் 66 கோடி பக்தர்கள், மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இவ்வளவு மக்கள் ஒரு இடத்தில் கூடிய போதிலும், ஒரு குற்றச் சம்பவங்கள் கூட நடக்கவில்லை. துன்புறுத்தல், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இதுவே மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பெரிய சான்றாகும் என்று கூறப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. 45 நாட்களில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது.
ஹோட்டல் தொழிலில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையில் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்குக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. போக்குவரத்து துறை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கோயில் சார்ந்த பொருட்கள் மற்றும் ஆன்மிக பூஜை பொருள்கள் விற்பனையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நன்கொடையாக மட்டும் 660 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சுங்கச்சாவடிகள் மூலம் 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதர வருவாய் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
மகா கும்பமேளாவுக்கு செலவு செய்யப்பட்ட 7500 கோடி ரூபாய் கும்பமேளாவுக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பிரயாக்ராஜின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப் பட்டது.
மகா கும்பமேளாவுக்காக மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. 14 மேம்பாலங்கள், 9 சுரங்கப்பாதைகள் மற்றும் 12 வழித்தடங்கள் கட்டப்பட்டன. நவீன விமான நிலைய முனையம் அமைக்கப்பட்டது.
இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் நாட்டின் திட்டமிடப்பட்ட 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் படகு உரிமையாளர்கள் மக்களிடம் ஏமாற்றியதாக சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், 45 நாட்களில் பெரும் வருமானத்தை ஈட்டிய ஒரு படகோட்டியின் வெற்றிக் கதையை விவரித்தார்.
மகா கும்பமேளாவின் மிகப்பெரிய பொருளாதார வெற்றியைக் குறிப்பிட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் ஒரு குடும்பம் 130 படகுகளை வைத்து குடும்பத் தொழிலாக படகு தொழில் செய்து வருவதாகவும், ஒவ்வொரு படகு மூலமும் 50,000 ரூபாய் முதல் 52,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்தார்.
மகா கும்பமேளா நடந்த 45 நாட்களில் அந்த குடும்பம் 30 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. ஒவ்வொரு படகின் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது.
இதுபோல், படகோட்டிகளில் பலர் நாள்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியதாக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் குறிப்பிட்ட அந்த படகோட்டி குடும்பத்தைச் சேர்ந்த பிந்து மஹாரா, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு செய்த ஏற்பாடுகள்தான் கும்பமேளாவுக்கு அதிக பக்தர்கள் வர காரணமாக இருந்ததாகவும், அதனால் தான் ஒருநாள் கூட தங்கள் படகுகள் காலியாக இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மகா கும்பமேளாவின்போது அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்கியதற்காக அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும், இந்த ஆண்டு வருவாயை ஒருபோதும் மறக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், மகா கும்பமேளா திருவிழா மிகப்பெரிய பொருளாதார வெற்றியாகவும் அமைந்து விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.