தூத்துக்குடியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள திருவைகுளம் மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இதிலிருந்து திருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் மனு அளித்து வந்துள்ளனர்.
ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கி தங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினர்.