ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில், நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையத்தில் நடைபெற்ற CISF ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அவரை வரவேற்க ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. போஸ்டரை ஒட்டியதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழியின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போஸ்டர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், இது குறித்து விளக்கமளிக்கும் விதமாக அருள்மொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கும் போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், உள்துறை அமைச்சருக்கும், தனது பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இதை யாரோ திட்டமிட்டு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.