சீனாவின் தொழில்துறை மாற்றத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சுயசார்பு தன்னிறைவு மற்றும் பொருளாதார சமநிலையில் கவனம் செலுத்தி, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வேம்பு வலியுறுத்தியுள்ளார். சீனாவிடமிருந்து இந்தியா எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு சொல்கிறார்? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
9-9-6 என்பது சீனாவில் பிரபலமான சொல்லாகி உள்ளது. 9-9-6 என்பது, இழிவான மற்றும் கடுமையான வேலை கலாச்சாரமாகும். சீனாவின் மிகப் பெரிய நிறுவனங்களில், இளம் ஊழியர்கள் வாரத்தில் 7 நாட்கள் 9 மணி முதல் 9 மணி வரை, வாரத்துக்கு மொத்தம் 72 மணி நேரம் வேலை செய்யும் புதிய கலாசாரமாகும்.
மேலும், ‘நெய்ஜுவான்’ என்ற சொல் ‘ஆக்கிரமிப்பு’ என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.பெரும்பாலும் ‘ஆக்கிரமிப்புப் போட்டி’ என்பதையே இந்த சொல் குறிக்கிறது. nèi juǎn என்பது ஆங்கிலத்தில் involution என்று சொல்லப்படுகிறது. சிக்கவைக்கப்படுவது அல்லது அமுக்கப்படுவது என்பது இதன் பொருளாகும்.
சீனாவில் பலர் தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கடுமையான போட்டி மற்றும் அழுத்தத்தை விவரிக்க ‘நெய்ஜுவான்’ (nèi juǎn) என்ற சீன சொல் பயன்படுத்தப்படுகிறது.
சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் அறிகுறியாக இந்த சொல் அமைந்து விட்டது. அதிக போட்டி நிறைந்த சமூகத்தில் சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரு சொல்லாக ‘நெய்ஜுவான்’ (nèi juǎn) அமைந்துள்ளது.
கடுமையான போட்டியால், குறைந்து வரும் வருமானங்களின் சுழற்சியை ‘நெய்ஜுவான்’ என்ற சொல் விவரிக்கிறது. தனிநபர்கள் குறிப்பிட்ட நன்மைகள் அல்லது லாபங்கள் கிடைக்காமல் கடினமாக உழைக்க கட்டாயபடுத்துவதே இந்த ‘நெய்ஜுவான்’ ஆகும்.
மாணவர்கள் அறிவைப் பெறுவதற்குப் பதிலாக தங்கள் சகாக்களை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதும், ஊழியர்கள் ஒத்துழைப்பதற்குப் பதிலாக பதவி உயர்வுகளுக்கு மட்டும் போட்டியிடுவதும், ஒரே குழுவில் உள்ள மற்றவர்களுடன் கடுமையான போட்டி போடுவதும் என இந்த ‘நெய்ஜுவான்’ (nèi juǎn) நேர்மறையான வளர்ச்சியை விட உள்நோக்கிய போட்டியை வலுப்படுத்துகிறது.
வணிகத்தைப் பொறுத்து, லாபங்கள் கிடைக்கவில்லை என்றாலும், விலைகளைக் குறைத்து, அதிக உற்பத்தி செய்வதை குறிக்கிறது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இது ஒரு இடைவிடாத போட்டியை விவரிக்கிறது, அங்கு தனிநபர்கள் தொடர்ந்து திறன்களை மேம்படுத்த வேண்டும், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், கடுமையாக போட்டியிட வேண்டும் .
கடந்த புதன்கிழமை, சீனப் பிரதமர் லி கியாங் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில், நாட்டின் பணி அறிக்கை பற்றி விரிவாக பேசியிருந்தார். “நெய்ஜுவான் மீது விரிவான ஒடுக்குமுறையை” தொடங்கப் போவதாகவும் உறுதியளித்தார். ஒரு சீன பிரதமர் தனது நிகழ்ச்சி நிரலை நிர்ணயிக்கும் வருடாந்திர உரையில் இப்பிரச்சினையைக் குறிப்பிட்டு பேசுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், நெய்ஜுவான் குறித்து எச்சரித்துள்ள Zoho ஸ்ரீதர் வேம்பு, சீனாவின் தனியார் துறையைப் பெரிதும் பாதித்துள்ள நெய்ஜுவான் மற்றும் 9-9-6 வேலை கலாச்சாரம் குறித்தும் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தனது சொந்த உற்பத்தித் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள, Zoho ஸ்ரீதர் வேம்பு, தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டையும் வலிமைப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் படிப்படியான அணுகுமுறையிலிருந்து கற்றுக்கொண்டு, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் Zoho ஸ்ரீதர் வேம்பு, விவரித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, முதல் கட்டத்தில் இருந்தது என்றும், கடந்த 15 ஆண்டுகளில், சீனா இரண்டாம் கட்டத்தில் முன்னேறி உள்ளது என்று Zoho ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இந்தியா இறக்குமதியை சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு பொருட்களை உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும்,சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை உருவாக்கி விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன்னிறைவு பெற்ற உள்நாட்டு சந்தையை வலுப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, மதிப்புச் சங்கிலியை மேம்படுத்த தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,அதிகப்படியான முதலீடு மற்றும் தீவிரமாக தூண்டப்படும் ஒரு தீவிரமான வணிக போட்டி சுழற்சி, 9-9-6- வேலை கலாச்சாரம் ஆகியவை சீனாவின் தனியார் துறையை பெரிதும் பாதித்துள்ளன. இதுவே சீனாவின் நீண்டகால பொருளாதார மற்றும் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு காரணமாகிறது என்றும் Zoho ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
எனவே தான், Zoho ஸ்ரீதர் வேம்பு, ‘நெய்ஜுவான்’ (nèi juǎn) வின் தொடர்ச்சியாக 9-9-6 வேலை கலாச்சாரத்தையும் குறிப்பிட்டு, இந்தியா சீனாவிடமிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.