அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சி மையத்திற்கு சோழ இளவரசர் ராஜாதித்யன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த ராஜாதித்ய சோழன், அவரின் சிறப்புகள் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56வது ஆண்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோழ இளவரசர் ராஜாதித்யன் பெருமைகளை சுட்டிக் காட்டிப் பேசினார்.
யார் இந்த சோழ இளவரசன் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்.அதற்கு சோழர்களின் வரலாற்றை அறிய கொஞ்சம் பின்னோக்கி செல்வோம். சோழப் பேரரசு பரந்து விரிந்தது பிற்கால சோழர்களின் காலத்தில் தான்.
குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சியில். கி.பி. 880ம் ஆண்டு திருப்புறம்பியம் போரில் வென்று சோழ பேரரசுக்கு அடித்தளம் அமைத்தார் விஜயால சோழன். அவரது மகன் ஆதித்ய சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு விரிவிடைந்தது. அவரது மகன் பராந்தக சோழன் ஆட்சியில், சோழர்களின் ஆட்சி குமரி தொடங்கி, வடக்கே நெல்லூர் வரை நீண்டது. குறிப்பாக ராஷ்ட்ரகூட மன்னர்களை தொடர் தோல்விக்கு உள்ளாக்கி, சோழ ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியிருந்தார்.
ஆனால், ராஷ்ட்ரகூடர்களின் பகை மட்டும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்கிற நிலையால், இளவரசனாக இருந்த ராஜாதித்ய சோழனை வட எல்லையில் படை அமைத்து நிர்வாகம் செய்ய உத்தரவிட்டிருந்தார் பராந்தக சோழன்.
எதிர்பார்த்தபடியே ராஷ்ட்ரகூட மன்னன் 3ம் கிருஷ்ணன், கங்க மன்னன் பூதுகன் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து, பெரும்படையுடன் சோழ தேசம் நோக்கி விரைந்தார். கி.பி 949ம் ஆண்டு, இப்போதைய அரக்கோணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தக்கோலம் என்கிற இடத்தில் இரு படைகளும் மோதின.
குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் ராஜாதித்ய சோழனின் தலைமையில் மிகவும் தீரத்துடன் போர் புரிந்தனர் சோழப்படையினர். சிறிய படை, பெரும்படையை சிதறடித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்று சோழர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக தலைமையின் இலக்கணமாக ராஜாதித்ய சோழன் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் இதுவே சோழப்படைக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த ராஜாதித்ய சோழனை வீழ்த்தினால் மட்டுமே போரில் வெல்ல முடியும் என்று முடிவு செய்த கங்க மன்னன் பூதுகன், தனது படைகள் ராஜாதித்தனை மட்டும் குறிவைத்து, தாக்க திட்டமிட்டான். தனது படைத் தலைவர்களில் ஒருவனான மணலேரா என்பவனுடன் சேர்ந்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்க வியூகம் வகுத்தான். இதன்படி, சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜ ஆதித்யனை தனிமைப்படுத்தினார்கள். அப்போது, பூதுகன் ராஜாதித்தனை நோக்கி மெல்ல முன்னேறி, அம்புகளை எய்தான்.
தீடீர் தாக்குதலை எதிர்பாராத ராஜாதித்ய சோழன் தற்காத்துக் கொள்ள முயன்றாலும், பூதுகன் விட்ட அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைத்தது. போர்க்களத்தில் யானையின் மீதமர்ந்த நிலையில், வீர மரணமடைந்தார் ராஜாதித்ய சோழன். தலைவன் இல்லாத படை சிதறியது. ராஷ்ட்ரகூடர் படை வென்றது. இறுதி வரை போரிட்ட ராஜாதித்யனை யானை மேல் துஞ்சிய சோழர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
போர்க்களத்தில் மட்டுமல்ல மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட இளவரசனாக இருந்தவர் ராஜாதித்யன் என்கிறார்கள். போர்க்களத்திற்கு சென்ற வீரர்களைக் கொண்டு் ஒரு ஏரியை வெட்டிய ராஜாதித்ய சோழன். அதற்கு தனது தந்தை முதலாம் பராந்தக சோழனின் பெயரையே சூட்டினான். செயற்கையாக வெட்டப்பட்ட பெரிய ஏரியாக இன்றைக்கும் மக்களுக்கு பயனளித்து வருகிறது.
குறிப்பாக சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வரும் வீராணம் ஏரி என்கிற வீர நாராயணன் ஏரிதான் அது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் தொடக்கம் இந்த ஏரியில்தான் தொடங்கும்.
இத்தகைய சிறப்பு பெற்ற ராஜாதித்த சோழனின் பெயர்தான் அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சி மையத்திற்கு அண்மையில் சூட்டப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வி்ழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ராஜாதித்த சோழன், சோழப் பேரரசின் பெருமையை முன்னெடுத்து சென்றார் என்றும், இந்த தக்கோலம் பகுதியில் தான் தனது வலிமையையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்ததாக குறிப்பிட்டார். தக்கோலத்தில் அமைந்துள்ள தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு சோழ வம்சத்தின் மாவீரர், ராஜாதித்த சோழர் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்காக தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.