திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சோளிங்கர் நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருத்தணி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே விபத்தில் காயம் அடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து அமைச்சர் நாசர் ஆறுதல் கூறினார். அப்போது பேட்டியளித்த அவர், விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.