மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முகப்பு வாயிலில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது மாணவர்களிடையே மும்மொழி கல்விக் கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பாஜகவினர், அவர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஆனால், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிதாக கூறி, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பாஜக கவுன்சிலர் சுந்தரம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது நடவடிக்கையை கண்டித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், தங்களையும் கைது செய்யக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கைதான 5 பேரும் சோழிங்கநல்லூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து பேரையும் ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.