மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பண்புகளாக திகழ்கின்றன. அத்தகையை மனித நேயத்திற்கு உதாரணமாக திகழும் சேலத்தைச் சேர்ந்த காவலர் சத்தியம்மாள் குறித்தும் அவரின் உன்னதமான சேவை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சேலம் லைன்மேடு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்த சத்தியம்மாள். கணவரோடு இணைந்து சேலம் மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் சத்தியம்மாள் கடந்த ஏழு ஆண்டுகளாக விபத்தில் சிக்கி உயிரிழப்போர், பொது இடங்களில் ஆதரவின்றி உயிரிழந்து கிடப்பவர்கள் ஆகியோரின் உடல்களை தன் சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார்.
ஆதரவற்ற நிலையில், அடையாளம் தெரியாத நிலையில் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களையும் இவரின் சொந்த செலவிலேயே அடக்கம் செய்து மனிதநேயத்தின் அடையாளமாக திகழ்கிறார்.
சேலம் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் இறந்த 120க்கும் அதிகமானோரின் உடல்களை தனது சொந்த செலவில் சத்தியம்மாள் அடக்கம் செய்துள்ளார். காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த உன்னத சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
காக்கி உடை அணிந்திருக்கும் காவலர்கள் என்றாலே ஒருவித இறுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை மாற்றி, அன்பு, கருணை, மனிதாபிமானத்திற்கு உதாரணமாக இருக்கிறார் சத்தியம்மாள்
சத்தியம்மாளின் மனிதநேயமிக்க பணிக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆதரவற்ற ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போது ஆயிரம் கோயில்களுக்குச் சென்ற நிம்மதி கிடைப்பதாக தெரிவிக்கும் சத்தியம்மாள், தன்னைப் போன்றே பிற மகளிரும் இதுபோன்ற சேவைப் மனப்பான்மையை தொடர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார்.